கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 16 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - தமிழக பா.ஜனதா தலைவர் தகவல்


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 16 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - தமிழக பா.ஜனதா தலைவர் தகவல்
x
தினத்தந்தி 9 April 2020 3:15 AM IST (Updated: 9 April 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 16 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் சென்னைக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்களிடம் ஏழை, எளியோருக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களை நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவன் விநாயகம், பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 27-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் அனைத்து அணியினரும் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, சென்னைக்கு உட்பட்ட பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் 7 பேரிடம் 1,500 ‘மோடி பேக்’ என்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பேக் வழங்கப்படுகிறது. இதில் 10 நாட்களுக்கு தேவையான 5 கிலோ அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்களும் அடங்கி உள்ளன.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 75 ஆயிரம் மோடி பேக் வழங்கி இருக்கிறோம். இதுவரை 10 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், முக கவசம், கையுறை, கிருமி நாசினிகள் சுமார் 2 லட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம். மொத்தத்தில் 16 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறோம்.

கட்சி தொடங்கி 40-வது ஆண்டையொட்டி, ஒரு பூத்துக்கு ஒரு நபராவது 5 பேருக்கு உணவு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அகில இந்திய அளவில் 1 கோடி தொண்டர்கள் 5 கோடி மக்களுக்கு உணவு வழங்கி உள்ளனர். தமிழகத்திலும் அனைவரும் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, பிரதமர் நலத்திட்ட நிதிக்கு ஒவ்வொருவரும் ரூ.100 வழங்குவதுடன் ஒரு நபர் 40 பேர்களை தொடர்பு கொண்டு ரூ.100 பிரதமர் நலத்திட்ட நிதிக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் முககவசம் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

அதற்காக எங்கள் மகளிர் அணி சார்பில் வீட்டில் இருந்தபடியே மாஸ்க் தயாரிப்பது என்பது குறித்து விளக்கமாக வீடியோ வெளியிட்டு மாஸ்க்குகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பிரதமர் நலத்திட்ட நிதிக்கு குறைந்தது 25 லட்சம் பேராவது நிதி வழங்க முயற்சி செய்து வருகிறோம். எங்கள் மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் ரூ.11 லட்சம் நிதி வழங்கி உள்ளார். மத்திய குழு ஆய்வு செய்தி தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்கும்.

கொரோனா தாக்கம் உள்ளவர்கள் அனைவரும் தங்களை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸை துரத்தி அடிக்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா வைரசிடம் இருந்து நம்மை பாதுகாப்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story