ரூ.2 லட்சம் காப்பீடு ஒப்பந்த பணியாளர்களுக்கு பொருந்துமா? - ஐகோர்ட்டு கேள்வி
ரூ.2 லட்சம் காப்பீடு ஒப்பந்த பணியாளர்களுக்கு பொருந்துமா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், ஒப்பந்தம் மற்றும் அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்று 2 பிரிவினர்கள் உள்ளனர். தூய்மை பணியில் ஈடுபடும் இவர்களுக்கு போதிய நோய் தடுப்பு சாதனங்கள், உயிர்காக்கும் சாதனங்களோ வழங்கப்படவில்லை. அதனால், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கவும், தேவையான உயிர்காக்கும் சாதனங்களை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, டாக்டர்கள், நர்சுகள் மட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சத்துக்கு காப்பீடும், தமிழக அரசு ரூ.2 லட்சத்துக்கு காப்பீடும் வழங்கியுள்ளன’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த காப்பீடுகள் ஒப்பந்த பணியாளர்களுக்கு இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் காப்பீடு தூய்மை பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பொருந்துமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கிருமிநாசினி, முக கவசங்களையும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இதேபோல, போலீசாருக்கு வழங்கும் மருத்துவ காப்பீட்டை ஊர்க்காவல் படையினருக்கும் வழங்கவேண்டும் என்று ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story