கொரோனா வைரஸ் பரவல்: மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே 3-வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க முடியும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


கொரோனா வைரஸ் பரவல்: மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே 3-வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க முடியும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 10 April 2020 3:00 AM IST (Updated: 10 April 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே 3-வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் கொரோனா வைரசால் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

இதில் வட்டார துணை ஆணையாளர் ஆகாஷ், சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அதிகாரி மனோகரன், செயற்பொறியாளர்கள் சொக்கலிங்கம், லாரன்ஸ், மண்டல உதவி வருவாய் அதிகாரி திருப்பால் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

கொரோனா வைரசுக்கு எதி ரான போராட்டத்தில் நாம் 2-ம் கட்டத்தில் இருக்கிறோம். அரசு பல்வேறு வகைகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வருகிறது. மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாம் 3-வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க முடியும். இதற்கு சமூக விலகல் மிக முக்கியம்.

சென்னையில் இதுவரை 12,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 67 பகுதிகள் தனிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

மீனவர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. விரைவில் மீனவர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story