பிரதமர் கூறும் ஆலோசனை படி கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


பிரதமர் கூறும் ஆலோசனை படி கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2020 5:55 AM IST (Updated: 10 April 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் கூறும் ஆலோசனை படிகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்துமுடிவு எடுக்கப்படும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா? என்பதை தெரிந்துகொள்ள மாநில மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் வருகிற 14-ந் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மந்ததிரிசபை கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அனைத்து மந்திரிகளும், ஊரடங்கு உத்தரவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறினர்.

பிரதமருடன்11-ந் தேதி (அதாவது நாளை ) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளேன். பிரதமர் கூறும் ஆலோசனைப்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக பெங்களூருவில் 10 ஆயிரம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக பொறுப்பு மந்திரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளேன்.

அவர்கள் அந்த மாவட்டங்களிலேயே தங்கி கொரோனா தடுப்பு பணிகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது போன்ற பணிகளில் ஈடு உள்ளனர். பூக்கள் பாதிப்பு, மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

மாவட்ட கலெக்டர்களுடனும் நான் ஆலோசனை நடத்தினேன். சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. விதைகள், உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் யாரும் பசியால் வாடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உணவு தானியங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 3, 4 நாட்களில் இந்த பணி நிறைவடையும். அதன் பிறகு மத்திய அரசு வழங்கியுள்ள உணவு தானியங்களும் வழங்கப்படும்.

மாம்பழம் இப்போது தான் வரத்தொடங்கியுள்ளது. அவற்றை பெங்களூருவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story