ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் பதவி ஏற்றார்


ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 12 April 2020 2:00 AM IST (Updated: 12 April 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் பதவி ஏற்றார்.

சென்னை,

ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்குமார் இருந்து வந்தார். இவரை, அப்பதவியில் இருந்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நீக்கினார். இதற்காக கடந்த 10-ந்தேதி அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதில், மாநில தேர்தல் ஆணையர் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்தது மட்டுமல்லாமல், இப்பதவியை ஓய்வுபெற்ற நீதிபதிகள்தான் வகிக்க வேண்டும் என்றும், புதிய விதிகளை உருவாக்கினார்.

இதையடுத்து, ஆந்திர மாநில புதிய தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் (வயது 75) என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணையராக நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் வி.கனகராஜின் தந்தை எம்.வெள்ளையன், தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிவர். சேலம் மற்றும் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த வி.கனகராஜ், சென்னை லயோலா கல்லூரியில் 1969-ம் ஆண்டு பட்டப்படிப்பும், சென்னை சட்டக்கல்லூரியில் 1972-ம் ஆண்டு சட்டப்படிப்பும் முடித்தார். 1973-ம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து வக்கீலாக தொழில் செய்தார். 1994-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். இப்பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.செல்வராஜ், இவரது மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story