அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி
கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்க தேசிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதனால், நாளை காலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ள பிரதமர் மோடி, ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மத்தியில், தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது:- ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. விழித்திருங்கள் - விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை பின்பற்ற வேண்டும்.
கட்டடத் தொழிலாளர்கள் உள்பட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்துக்கான 15 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதுதான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும். ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், இலவசமாக வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்கத்தடையில்லை. பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story