பிரசவத்தில் இறந்த பெண்ணுக்கு கொரோனா: தனிமையில் 10 டாக்டர்கள் - முறையான பாதுகாப்பு இல்லாமல் சிகிச்சை?
கொரோனா பாதித்த பெண் பிரசவத்தின்போது பலியானதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த 10 டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை,
உலகம் முழுவதும் கொக்கரிக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த போரில் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காக்கும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 27 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் தாயும், சேயும் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் உடலை எடுத்து சென்று தகனம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகாரணங்கள் இல்லாமல் சிகிச்சை அளித்த 10 டாக்டர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் 40-க்கும் மேற்பட்டோரும், இறுதி ஊர்வலத்தில் 5 பேரும் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது தெரியாமல் வழக்கமான முறைகளிலேயே இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது.
மருத்துவமனைகளில் பிரசவ காலம் நெருங்கும் பெண்களுக்கு, பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் முறையான கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யாததால், பரிசோதனை முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி, பரிசோதனை முடிவு வருவதற்குள் வந்ததால் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யாததால் 25-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசில் இருந்து காப்பாற்ற வேண்டியவர்களே அலட்சியமாக செயல்பட்டு கொரோனா பரவுவதற்கு காரணமாக இருக்கும் இந்த செயல் பல்வேறு பிரிவினர்களிடையே பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
Related Tags :
Next Story