“ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பை சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்” - மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பை சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட 2-வது ஊரடங்கு காலம், மே 3-ந் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
கொரோனா பரவலைத் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்கு கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.
சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்
அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்.
35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு வாரத்துக்கு முன்பு ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தை துவக்கினோம். இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து இன்றைக்கு வரை 6 லட்சம் பேர் இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.
இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. என் மீதும், தி.மு.க. மீதும் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. நாம் அரசாங்கம் கிடையாது. அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். ஏனென்றால், தி.மு.க. என்பது மக்கள் அரசாங்கம்.
தி.மு.க. தொண்டர்களின் உள்ளம் என்பது மாபெரும் கஜானா. தி.மு.க.வின் உட்கட்டமைப்பு என்பது வேரில் இருந்து வலுவானது. அந்தக் கட்டமைப்பை வைத்து இந்த இக்கட்டான சூழலிலும் இந்த கொரோனா காலத்திலும் களத்தில் நிற்கிறோம். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள் என்று சொல்லும் அரசாங்கம், இதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல்தான் இருக்கிறது. அப்படி பாதிக்கப்படும் மக்களுக்காக உங்களால் முடிந்த உதவியை நீங்களும் செய்யுங்கள். மக்கள் நலனுக்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தி.மு.க.வும் உங்களுக்குத் துணையாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story