இன்று மே தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியமில்லாமல், காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்களின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும் தினமாகவும் மே தினம் விளங்குகிறது.
“உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுக்கும்” என்ற நம்பிக்கையோடு, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் எனது அன்புக்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம், தொழிலாளர் நலனுக்காகத் தனியாக ஒரு அமைச்சகம், உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்கள் போன்றவை தி.மு.க. ஆட்சியின் முத்தான திட்டங்கள். தொழிலாளர்களுக்குப் பன்முக நலத்திட்டங்களையும், உயிர் காக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவத் திட்டங்களையும் வழங்கியது தி.மு.க. அரசின் வியத்தகு சாதனைகள்.
ஒருபுறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் தி.மு.க. இப்போது மட்டுமல்ல எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இணைந்து போராடும். அனைவருக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலைவர்கள்
இதுபோல காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ஜனதா தலைவர் எல்.முருகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.முஸ்தபா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் சம்சுதீன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் மா.இசக்கிமுத்து உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story