தமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று: சென்னையில் புதிதாக 138 பேருக்கு உறுதி - புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று: சென்னையில் புதிதாக 138 பேருக்கு உறுதி - புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 May 2020 5:45 AM IST (Updated: 1 May 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஒரே நேரத்தில் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை.

சென்னை, 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் இந்த நோய் தொற்றுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளும், முதியவர்களும் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால் தமிழகத்தில் சமூக பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அதாவது சென்னையில் நேற்று 2 மாத பெண் குழந்தை உள்பட 138 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 97 ஆண்கள், 64 பெண்கள் என 161 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 161 பேரில், 2 மாத குழந்தை உள்ளிட்ட 11 குழந்தைகள் உள்பட 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேருக்கும், காஞ்சீபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, கோவை, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கி உள்ளதால் அவை பாதிப்பு அதிகம் உள்ள ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா நோய் தொற்று இல்லாமல் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள், செங்கல்பட்டில் 2 குழந்தைகள் என 12 வயதுக்கு உட்பட்ட 13 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,258 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 1,035 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவுவதை தடுக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், மருத்துவ நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் பிரப்தீப் கவுர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனால் அதிக தொற்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமநிலையில் இல்லை. சில மாவட்டங்களில் அதிகரித்து உள்ளது. பல மாவட்டங்களில் குறைந்து இருக்கிறது. இந்த அளவீடுகளை வைத்து பார்த்தால், மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது. முழுவதுமாக ஊரடங்கை நீக்கும் சூழ்நிலை இப்போது எழவில்லை.

சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் அல்லது தொடரலாம். இதை அரசுதான் முடிவு செய்யும். ஆனால் ஊரடங்கை தளத்தினாலும் முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை. படிப்படியாகத்தான் அதை தளர்த்த முடியும். அதோடு, சில தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாக வேண்டும்.

பொது இடங்களுக்கு வரும்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசத்தை அணிவதும் மிகவும் அவசியம். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற நடைமுறையையும் இனி தொடர்ந்தாக வேண்டும். மொத்தத்தில், நமது வாழ்க்கை முறையை இனி மாற்றியாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் சுப்பிரமணியம் கூறுகையில், கொரோனா வந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி பழைய வாழ்க்கை முறையை எதிர்பார்ப்பது முடியாத காரியம் என்றும், அப்படி இருந்தால் அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story