ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள்: செல்போனில் மருத்துவ ஆலோசனைகள் தரும் குடும்ப டாக்டர்கள்
ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு செல்போன் வழியாக அவர்களது குடும்ப டாக்டர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். கட்டணத்தை கூட கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
சென்னை,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல் வேறு எந்த காரணத்துக்காகவும் பொதுமக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வீட்டின் வளாகம் மற்றும் மொட்டை மாடிகளில் நடைப்பயிற்சி மற்றும் தேவையான உடற்பயிற்சிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள் தவிர சாதாரண கிளினிக்குகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் தங்களது வழக்கமான உடல்நல பரிசோதனைகள் செய்யக்கூட முடியவில்லை. குறிப்பாக உடல் எடை குறைப்புக்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறவர்கள், டாக்டர்கள் ஆலோசனையின்றி தவிக்கிறார்கள். இதனால் தங்கள் உடல்நலம் குன்றிவிடுமோ? என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே தங்களது வழக்கமான குடும்ப டாக்டர்களின் உதவியை மக்கள் நாட தொடங்கியுள்ளார்கள்.
டாக்டர்களின் அறிவுரைகள்
மக்கள் வீடுகளில் இருக்கும் சமயங்களில் உடலநலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் கை மருத்துவம் செய்யவேண்டாம் என்றும், டாக்டர்கள் உதவியை நாடுமாறும் அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதை கடைபிடித்து மக்கள் தங்கள் குடும்ப டாக்டர்களை செல்போனில் தொடர்புகொள்கிறார்கள். மக்களின் மனநிலையையும், சூழ்நிலையையும் உணர்ந்துகொண்டு டாக்டர்களும் செல்போன் வழியாக தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் வீடியோ கால் வழியாகவும் உடல்நலம் குறித்த அறிவுரைகளையும் டாக்டர்கள் வழங்குகிறார்கள்.
தேவையான மருந்து, மாத்திரைகள் குறித்த விவரங்களையும் ‘வாட்ஸ்-அப்’பில் டாக்டர்கள் அனுப்பி வைக்கிறார்கள். மேலும் உடற்பயிற்சி முறைகள், உணவு உட்கொள்ளும் முறைகள் குறித்த தேவையான அறிவுரைகளையும் மக்களுக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் அடிக்கடி தங்கள் டாக்டர்களை உதவியை நாடி தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று விடுகிறார்கள்.
நிவாரண நிதிக்கு நன்கொடை
இவ்வாறு, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி வேண்டிய ஆலோசனைகளை டாக்டர்கள் வழங்கி வருவதை பார்க்க முடிகிறது. இதற்கான கட்டணத்தை (கன்சல்டேஷன் பீஸ்) சிலர் ஆன்லைனில் அனுப்ப முன்வந்தாலும் டாக்டர்கள் அதனை மறுத்துவிடுகிறார்கள். சில டாக்டர்கள் “நீங்கள் கட்டணம் செலுத்த விரும்பினால் கொரோனா தொற்று நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வையுங்கள். அது போதும்” என்று பெருந்தன்மையாக கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story