சென்னையில் மேலும் 6 அரசு டாக்டர்களுக்கு கொரோனா

சென்னையில் மேலும் 6 அரசு டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய 6 பட்டமேற்படிப்பு டாக்டர்கள் உள்பட 9 மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 6 டாக்டர்களும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இது போல் தமிழகத்தில் டாக்டர்கள் செவிலியர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் நேற்று 6 டாக்டர்களும் ஒரு மகப்பேறு மருத்துவ ஊழியரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றிய 2 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதில் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பட்ட மேற்படிப்பு டாக்டர்களும், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேற்று சென்னையில் மட்டும் 6 அரசு டாக்டர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 27 வயது பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 25-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஒரு மகப்பேறு மருத்துவ ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தொடர்ந்து டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story