கிருஷ்ணகிரி: கொரோனா பாதித்த நபரின் கிராமத்திற்கு ‘சீல்’; 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு உறுதியான நபரின் கிராமத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன் அவருடன் 11 பேர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணகிரியில் ஊரடங்கு விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டன. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து பயணத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியின் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார். அவருடன் 3 பேர் சென்றுள்ளனர். வந்த இடத்தில் அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அவருடன் சென்ற 3 பேர் மற்றும் அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோன்று கொரோனா பாதித்த நபரின் நல்லூர் கிராமத்திற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்கு உள்ளே செல்வதற்கோ அல்லது ஊரில் இருந்து வெளியே போவதற்கோ தடை விதிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story