ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தினமும் வெளியாகும் செய்திகள் நமக்குச் சொல்கின்றன. இந்தியாவில் ஊரடங்கு மே 4-ம் தேதி முதல் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோய்த் தாக்குதலின் தன்மை கடந்த நாற்பது நாட்களில் கட்டுக்கடங்காமல் பரவலாகி வருவதையே மத்திய அரசின் இந்தப் பிரகடனம் உணர்த்துகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை இந்தியாவில் 37 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து இருநூறைத் தாண்டிவிட்டது. அதேபோல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526-ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உள்ளது. இந்தப் பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், மத்திய - மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதித்து, மக்கள் தவறாமல் அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவசர - அவசியத் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் உறுதியாகத் தவிர்த்தாக வேண்டும்; அப்படியே வர நேரிட்டாலும் கடைப்பிடித்திட வேண்டிய விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாகத் தலைநகர் சென்னை மிகவும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து பெருகி வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 233-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை அச்சம் தருவதாக உள்ளது. இது சமூகப் பரவலாக மாறிவிடாமல் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மக்களுக்கும் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
இரண்டு வார காலம் ஊடரங்கு நீட்டிக்கப்படும் போது, இதனால் தொடர்ந்து பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து, அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து சமூக, பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான உதவிகளை மத்திய - மாநில அரசுகள் செய்துதர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கும், அதன் பிறகு மார்ச் 25ம் தேதி முதல் தற்போது வரை, ஏறத்தாழ இரண்டு மாத காலம் என்பது, அன்றாடங் காய்ச்சிகள், கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வார ஊதியம் பெறுபவர்கள், சிறு வியாபாரிகள், குறு நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெசவாளர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் நீண்ட கேள்விக்குறிக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் மிகுந்த சோதனையான காலம் என்பதில் இருவேறு கருத்து இருப்பதற்கில்லை. அவர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடுகள் நிச்சயம் போதுமானது அல்ல. ஆரம்பத்தில் இருந்தே நான் குறிப்பிட்டுச் சொல்லி வரும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை - அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ள அந்த நிவாரணத் தொகையை - அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
தமிழக முதல்வரின் எடப்பாடி தொகுதியில் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினர் கஞ்சி மட்டுமே குடித்து வாழ்க்கை நடத்தும் அவலம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். அரசு வழங்கிய பொருட்கள் முடிந்த நிலையில், உணவுப் பொருட்கள் இல்லாமல், குழந்தைகளுக்குக் கஞ்சி மட்டுமே கொடுத்து நாளைப் போக்கி உள்ளார் பெரிய சோகை கிராமத்தைச் சேர்ந்த அந்த தொழிலாளி. இப்படி எத்தனையோ விளிம்பு நிலைக் குடும்பங்கள் தங்கள் சோகத்தை வெளியில் சொல்லமுடியாமல், அதை விழுங்கிக்கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?
ஐயாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி அவர்களைக் கைதூக்கி விடப்போகிறதா அல்லது கைவிட்டுவிடப் போகிறதா?
அரசியல் ரீதியான பிரச்சினை என்றால்கூட கொஞ்சம் காலதாமதம் ஆனால் பரவாயில்லை என்று பொறுத்திருக்கலாம். ஆனால் அன்றாடம் வயிறு வளர்க்கத் தேவையான உணவே இல்லை எனும்போது, உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டாமா?
மூன்றுவேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் தர முடியாத நிலைமையிலா தமிழக அரசு உள்ளது?
நோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்கிற போது, அதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் உழைப்பாளி மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. உழைத்திட அவர்களுக்கு இரண்டு கைகளும் கால்களும் இருப்பதைப்போல, உண்ணுவதற்கு ஒரு வாயும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
அடுத்ததாக, கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் போதாமை உள்ளதாக இன்னமும் தகவல் வருகிறது. அதனை அரசு சரி செய்ய வேண்டும். மருத்துவர்களின் தேவையை முழுமையாக வழங்கினால்தான், பாதிக்கப்பட்ட மக்களை அவர்களால் சேதாரமின்றிக் காப்பாற்ற முடியும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உயர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நோய்த் தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கொரோனா காலத்திலும் களத்தில் நிற்கக் கூடிய இவர்களே பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்தி, விரைவு படுத்த வேண்டும். பரிசோதனை செய்வதன் மூலமாக மட்டும்தான் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்ற உண்மை அனைவரும் அறிந்ததுதான். எனவே பரிசோதனைக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவுக்குத் தாராளமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும்.
பரிசோதனைக் கருவிகள் இல்லை; இருந்தாலும் சரியாக வேலை செய்யவில்லை - சரியாக அடையாளம் காட்டவில்லை என்று இப்போதும் காரணம் சொல்லிக் கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டு இருந்தால், நோய்த் தொற்றை எப்போது முழுமையாக ஒழிப்பது?
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொடர்பான சளி பரிசோதனை செய்திட தொண்டையிலிருந்து சளி எடுக்கும் நைலான் குச்சி தட்டுப்பாடு என்றும், இதனால் சளி பரிசோதனை செய்ய வந்தவர்களைத் திருப்பி அனுப்பினார்கள் என்றும், சளி எடுக்கும் நைலான் குச்சி மறுநாள் வரவுள்ளதால் அதன்பிறகு வருமாறு கூறினார்கள் என்றும் செய்தி பார்த்தேன். இதுபோன்ற தகவல்கள் அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகின்றன.
சென்னையில் இராயபுரம், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் மக்கள் மிகமிக நெருக்கமாக வசித்து வருகிறார்கள். அதேபோல் கூவம் கரையோர மக்கள், குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் - இவர்களைச் சிறப்புக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டும்.
இதேபோல் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில் நகர், நாவலூர், கூடப்பாக்கம், எண்ணூர் சுனாமி காலனி உள்ளிட்ட மற்றும் பிற பகுதி மக்களுக்கும் மிகவும் கவனமாகப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் இடைவெளி அரை அடி கூட இல்லை, வீட்டுக்குள் நீரில்லை, கழிவறை வெளியில் உள்ளது இப்படிப்பட்ட சூழலில், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் என்பவற்றைக் கடைப்பிடிக்க இயலாத நெருக்கடியான நிலையில் வாழ்கிறார்கள். மிகக் குறுகிய இடத்தில் அதிக மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உணவிற்காக, வாழ்வாதாரத்துக்காக வெளியே வரத் தொடங்கினால், மிகவும் ஆபத்தான நிலைதான் ஏற்படும். எனவே தமிழக அரசு இந்தக் குடியிருப்பு பகுதிகளில் உடனே கவனம் செலுத்தி, உணவுப்பொருள் மற்றும் குறைந்தபட்சத் தேவைகள் அனைத்தையும் வீடுகளிலேயே கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் முகக்கவசம் கையுறைகளை வழங்க வேண்டும். கிருமிநாசினிகளை எல்லா பகுதிகளிலும் தொடர்ந்து தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். மருத்துவ அலுவலர்கள் முழுமையாக பணியில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தனியாகச் சிறப்பு அலுவலர்களை நியமித்து, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படிப் பகுதி பகுதியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
காவல்துறையினர், மருத்துவத்துறை டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, மின் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் என பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி - கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
“ஒன்றிணைவோம் வா “ என்ற திட்டத்தின் மூலம் திமுக தோழர்கள், இயன்றவரை உணவு மற்றும் மருந்துப் பொருட்களை உதவி கேட்பவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். "ஏழைகளுக்கு உணவளிப்போம்" - என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தின் 25 நகரங்களில் உணவு தயாரித்து தன்னார்வத் தொண்டர்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு உணவும் வழங்கி வருகிறோம். பயனடைந்தவர்கள் பலரிடம் நான் பேசி வருகிறேன். அவர்கள் அனைவரும், அரசாங்கம் தங்களது தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஊரடங்கில் சிக்கி - குறைந்தபட்ச வருமானமே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த இயலாது. ஆகவே அரிசி பெறும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்கள் இப்போது எதிர்கொள்ளும் பாதிப்பு என்பது அவர்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பாதிப்பு என்பது மட்டுமல்ல; நாம் அனைவரும் கண்டும் கேட்டும் இராத பாதிப்பாகும். எவராலும் கற்பனை கூடச் செய்ய முடியாத பாதிப்பு. இத்தகைய பிரச்சினைகள் மிகுந்த சூழலில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஊரடங்கு காலத்தை நீட்டித்துக் கொண்டே போவதோடு ஓர் அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. ஊரடங்கு என்பது தொடக்கம்தான்; ஊரடங்கே தீர்வல்ல!
ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை. அப்படி அரசு பிறப்பித்த ஊரடங்கினால் வெளியே சென்று உழைத்து வாழ்வாதாரம் தேட முடியாமல், வேறு வழியின்றி வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்குத்தான் உள்ளது.
மக்களைக் காப்பதுதான் மக்களாட்சியின் இலக்கணம். அந்த இலக்கணப்படி மத்திய - மாநில அரசுகள் செயல்பட்டு, இது மக்கள் அரசாங்கம் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்கான அரசாங்கம் என்பதை இந்தப் பேரிடர் காலத்தில் நிரூபிக்க வேண்டும் என்பதைக் கனிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
இவை அரசைக் குறை சொல்வதற்காகவோ, அரசியலுக்காகவோ சொல்லப்படுபவை அல்ல; குறைகாண முடியாத அரசாக - எல்லோருக்குமான அரசாக மாற்றிக் கொள்ளுங்கள் என்பதற்காக அக்கறையுடன் சொல்லப்படுபவை.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story