தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை,
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அமைச்சரவை நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவுகள், சென்னை, மற்ற மாவட்டங்கள், தளர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:-
1. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய்க்கட்டுப்பாட்டு பகுதி தவிர)
*கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமானப்பணிகள் அனுமதிக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப்பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்
சிறப்பு பொருளாதார, மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின் சூழ்நிலைக்கேற்ப 25 சதவீத பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT&ITes): 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்த 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் , ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
அனைத்து தனிக்கடைகள் (முடித்திருத்தங்கள்/அழகு நிலையங்கள் தவிர) ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப்பொருட்கள், சானிடைசர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள் மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின்மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
பிளம்பர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக் தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத்தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்
2. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய்கட்டுப்பாடு பகுதிகள் தவிர - Except containment Zones) கீழ் கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்த பட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் (ஜவுளித்துறை உள்பட ) செயல்பட அனுமதிக்கப்படும்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப ஜவுளித்துறை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
SEZ, EOU, தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம் நகரம்) : 50 சதவிகித பணியாளர்களை கொடு செயல்பட அனுமதிக்கலாம், நகரப்பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
* நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
* மின்னணு வன்பொருள் உற்பத்தி: 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
* கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிஅளிக்கப்படும்.
நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் சாம்பிள்கள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து 30 சதவித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கபப்டும்
தகவல் தொழில்நுட்படம் 50 சதவிகித பணியாளர்கள் குறைந்த பட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
நகரபுறங்களில் கட்டுமானப்பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டுமே வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.
பிளம்பர், எலெக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர், உள்ளிட்ட சுய திறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்
அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட் கட்டுமானப்பொருட்கள் சானிடரிவேர், மின்சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப்பொருட்களை எடுத்துச்செல்ல எந்தவித தடையும் இல்லை.
* மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின் மோட்டர் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
* நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள், மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்பட அனுமதி அளிக்கலாம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதைக் கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ((Standard Operating Procedures) தீவிரமாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் ((AgroProcessing), தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்கு தடையின்றி தொடர்ந்து முழுமையாகச் செயல்படலாம்.
கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.
பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமானப் பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டுகள் பெற வேண்டும். நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புறத் தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகிதப் பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
தடைகள் உள்ள பகுதிகள்
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
2. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
3. திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
5. பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து.
6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா
7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
8. மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.
9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள் / சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்குத் தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஜெயலலிதாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story