கேட்காமலேயே உதவிக்கரம்: ரஜினிகாந்துக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் நன்றி
கேட்காமலேயே தங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பாதிப்பு ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது போல் சினிமா மற்றும் சின்னத்திரை தொழில்களும் முடங்கி உள்ளது. இந்தநிலையில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ‘பெப்சி’ அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் அவர் திரைப்பட இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கினார்.
நலிந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அந்த சங்க நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தினருக்கும், அவர்கள் கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டி உள்ளார். அவர் வழங்கிய நிவாரண பொருட்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து ரவி வர்மா நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களுடைய நிலையை உணர்ந்து மனிதநேய அடிப்படையில் உதவிய ரஜினிகாந்துக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழங்கிய தலா 10 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்பட மளிகை பொருட்கள் 550 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. நெருக்கடி காலத்தில் அவருடைய உதவி எங்களுக்கு ஆறுதலாக அமைந்து உள்ளது. நாங்கள் கேட்காமலேயே அவர் உதவியது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது’ என்றார்.
இதேபோல் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் பண உதவி செய்து உள்ளனர். இதனிடையே தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காய்கறிகளை அந்த சங்கத்தின் கவுரவ தலைவர் கடையம் ராஜீ, தலைவர் பிரேம்நாத் ஆகியோர் வழங்கினர்.
Related Tags :
Next Story