‘டயாலிசிஸ்’ உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதில் பிரச்சினை - தாமதமாக வருவதால் நோயாளிகள் தவிப்பு
‘டயாலிசிஸ்’ உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ஆம்புலன்சை அழைத்து, பல மணி நேரம் கழித்து தாமதமாக வருவதால் நோயாளிகள் தவிக்கின்றனர்.
சென்னை,
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் நோயாளிகள், கர்ப்பிணிகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மருத்துவ உதவி பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் சாலை விபத்துகள் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் சேவைகளை மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் தேவைகளுக்காக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாகவும், ஆம்புலன்சை அழைத்தால், பல மணி நேரம் கழித்து தாமதமாக வருவதால் மிக சிரமாக இருப்பதாகவும், இதுகுறித்து கேட்டால் ஊழியர்கள் மெத்தனம் காட்டுகின்றனர் என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 46). ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மருத்துவமனைக்கு சென்று ‘டயாலிசிஸ்’ செய்வதில் பிரச்சினை இருந்து வருவதாக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என 2 நாட்கள் சிகிச்சைக்கு வர வேண்டும் என மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களிடம் வாகன வசதி எதுவும் இல்லாததால், தமிழக அரசு அறிவித்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. அரசு எந்த அளவில் துடிப்பாக செயல்படுகிறோதோ அதே அளவில் ஆம்புலன்ஸ் சேவை துடிப்பாக செயல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒருமுறை அந்த ஆம்புலன்ஸ் சேவையை பெற தொலைபேசியில் தொடர்பு கொண்டால், அந்த ஆம்புலன்ஸ் வந்து சேருவதற்கு 3 அல்லது 4 மணி நேரம் மேலாகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்து மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. கால தாமதமாக ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டியநிலை ஏற்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகும் கூட வீட்டிற்கு செல்ல ஆம்புலன்சை தொடர்பு கொண்டால், அவர்கள் மிகவும் கால தாமதமாக வருகிறார்கள்.
மன உளைச்சல்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியரிடம் கேட்டால், உங்களைப் போன்றவர்களுக்கு 5 ஆம்புலன்ஸ் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் காலதாமதம் ஆகத்தான் செய்யும் என்று மெத்தனமாக பதில் அளிக்கின்றனர். இது என்னை போன்ற நோயாளிகளுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்காததால் தான் நாங்கள் அரசின் உதவியை நாடுகிறோம் என்றார்.
கர்ப்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும் அவர்கள் அழைத்த அடுத்த 20 நிமிடத்தில் குறிப்பிட்ட அந்த ஆம்புலன்ஸ் வரும் என்றும், ஆம்புலன்சில் அனைத்துவிதமான உபகரணங்கள் இருக்கும் என்றும் அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த முயற்சியை தவிடுபொடி ஆக்கும் விதமாக ஊழியர்கள் செயல்படுவது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து கருத்து கேட்டபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
Related Tags :
Next Story