மதுக்கடைகள் திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் - அரசுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
மதுவிலக்கை அமல்படுத்த பொன்னான வாய்ப்பு என்றும், மதுக்கடைகள் திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் அரசுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பசுமை மண்டலங்களில் இருக்கும் மதுக்கடைகளை, சில விதிகளுக்குட்பட்டு திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தேவையற்றதாகும். தமிழகத்தில் பசுமை மண்டல மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது அங்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்து விடும். இதையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மதுக்கடைகள் விஷயத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் தடுக்கப்பட்ட மதுக்கடைகளை கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் திறந்து, அதனையும் சிவப்பு மண்டலமாக மாற்ற திட்டமிடுகிறார்கள். ஒருமுறை நேரு, இடைக்கால அரசை அமைப்பதற்கு ஆசி வேண்டி காந்தியை சந்திக்க சென்றார். அப்போது காந்தி ‘மதுக்கடைகளையும், தீண்டாமையையும் ஒழிப்பதன் மூலம் ஆசியை பெறுங்கள்’ என்று சொன்னார். அப்படிப்பட்டவர் பிறந்த குஜராத்தையும், பாரதத்தையும் ஆண்டுகொண்டிருக்கிற பிரதமர் மோடி மதுக்கடைகள் மூடியது மூடியதுதான், காந்தி கண்ட மதுவில்லா பாரதமே நம்நாடாகும் என்று உடனே அறிவிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு இனி எக்காரணம் கொண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது. மதுவிற்பனை வருவாயை ஈடுகட்ட பல வழிகள் இருக்கின்றன. முதலில் ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கை முழுமையாகப் பெற்று, மத்திய அரசில் நமது உரிமையை தட்டிக்கேட்க தமிழக அரசு முன்வர வேண்டும். ‘முழு மதுவிலக்கு’ என்பதை செயல்படுத்துவதற்கான பொன்னான இந்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூடியதால், மதுப்பழக்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மதுக்குடிப்பதை நிறுத்திவிட்டார்கள். எனவே தமிழக அரசு ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி, ஊரடங்கு முடியும்போது தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினால், ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டாஸ்மாக் மதுபானக்கடைகளை அவசரப்பட்டு திறப்பது, இதுவரை எடுத்துவந்த நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி நோய் பெருந்தொற்று பரவலுக்கு பச்சைக்கொடி காட்டும் குற்றச்செயலாகிவிடும். கொரானா வைரஸ் நோய் பெருந்தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்கும் எண்ணத்தை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்’ என்றார்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, ‘மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை எந்த காரணத்தை கொண்டு மீண்டும் திறக்கக்கூடாது. பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story