கோயம்பேடு சந்தைக்கு அடிக்கடி சென்ற மக்களுக்கு கொரோனா சோதனை - தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்


கோயம்பேடு சந்தைக்கு அடிக்கடி சென்ற மக்களுக்கு கொரோனா சோதனை - தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 May 2020 9:30 PM GMT (Updated: 2 May 2020 8:29 PM GMT)

நிலைமை மோசமடைவதற்குள் கோயம்பேடு சந்தைக்கு அடிக்கடி சென்ற மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோயம்பேடு சந்தை புதிய கொரோனா நோய்த்தொற்று மையமாக உருவெடுத்திருப்பதாக தெரிகிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்களுக்கும், அங்கு காய்கறி வாங்க-விற்க சென்று வந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கடந்த 39 நாட்கள் ஊரடங்கு காலத்தில் கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

குறிப்பாக 4 நாட்கள் முழு ஊரடங்குக்கு முன்பாக அதாவது கடந்த 25-ந்தேதி மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்றுள்ளனர். கோயம்பேடு சந்தையில் கடந்த பல நாட்களுக்கு முன்பே கொரோனா தொற்று நிகழத் தொடங்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

அத்தகைய சூழலில் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை கண்டுபிடித்து சோதனை செய்து குணப்படுத்தாவிட்டால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவி, நிலைமை மோசமடையக்கூடும். 

இதைத் தடுக்கும் வகையில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள், மற்றும் அங்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு ஏதேனும் சில வகைப்பாடுகளின் அடிப்படையில் சோதனை செய்து அச்சத்தை போக்க வேண்டும். அங்கு சென்று வந்தவர்களில் யாருக்கெல்லாம் சோதனை தேவை? என்பதை அறிவித்து, அவர்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொள்ள அரசு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story