50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தலாம் - கல்வித்துறை உத்தரவு
50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சமூக விலகல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகத்தைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதுபோல், தன்னார்வமுடன் முன்வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை முழுவதுமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தலாம்.
அப்படி வரும் 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மருத்துவ சிகிச்சை அல்லாத பணிகளான பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க வலியுறுத்துவது, அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிப்பது, கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது, பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தன்னார்வமுடன் முன்வரும் 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story