கட்டுமானப் பணியில் உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
கட்டுமானப் பணிகளுக்கு உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பிரதமரின் பி.எம்.ஜி.எஸ்.ஒய். திட்டத்தின் கீழ், சாலைகள் மற்றும் பாலங்கள் மற்றும் இதர கட்டுமானப் பணிகளை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கட்டுமானப் பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நெடுந்தொலைவிலுள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை தொடங்க வேண்டும்.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் கட்டுமான பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்ததாரர்கள், உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடக்கத்தில் சிறு சிறு பணிகளை தொடங்க ஒப்பந்ததாரர்களுக்கு பொறியாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும். பெருமளவு பணிகள் மேற்கொள்வதை மெல்ல மெல்ல அதிகரிக்கலாம்.
தொழிலாளர்களுக்கு துணியினால் ஆன முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டும். பணித் தளத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றுடன் கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
55 வயதுக்கு மேற்பட்டவரை பணிக்கு அமர்த்தக்கூடாது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், சிறுநீரகம், இருதய நோய் உள்ளிட்ட தீவிர நோயுள்ளவர்களை பணிகளில் தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், சுவாசபிரச்சினை உள்ளவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம்.
பணியிடத்தில் உணவு பொருட்கள், குடிநீரை பகிர்ந்துகொள்ளக் கூடாது. தொழிலாளர்களை மொத்தமாக அழைத்து வரவோ, அனுப்பி விடவோ கூடாது. புதிதாக அறிவிக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு மையங்களில் கட்டுமானப் பணி நடந்தால் உடனே நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story