காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்திய போர் விமானம் மூலம் மரியாதை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்திய போர் விமானம் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை,
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கொரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும்வகையில், கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டர்கள் மலர் தூவும். காஷ்மீர் முதல் குமரிவரை போர் விமானங்கள் பறக்கும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். அதன்படி,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் மீது மலர்தூவி இந்திய ராணுவத்தினர் மரியாதை செய்தனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நன்றி கூறும் விதமாக மரியாதை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவை மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி விமானப்படை மரியாதை செலுத்தியது.
அப்போது டாக்டர்கள், நர்சுகள் மருத்துவமனை முன்பு நின்றபடி ஹெலிகாப்டர்களை பார்த்து கையசைத்தனர். ஹெலிகாப்டர்கள் சுமார் 500 முதல் 1000 மீட்டர் உயரத்தில் பறந்து சென்று மலர் தூவியதை பொதுமக்கள் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கண்டு ரசித்தனர்.
கலங்கரைவிளக்கம் அருகே உள்ள கடல் பகுதியில் இன்று இரவு கப்பல்கள் மின் விளக்குகளை ஒளிர செய்தும், சைரன்களை ஒலித்தும் டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது வாண வேடிக்கையும் நிகழ்த்தப்படுகிறது.
கொரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்த கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்தும். கப்பல்கள் வண்ண விளக்கொளியில் மிளிரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா ஆஸ்பத்திரிகள் முன்பு ராணுவம் சார்பில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்படும்.
கோவை, சூலூர் விமானப்படை பிரிவு சார்பில் சி-130 சரக்கு போக்குவரத்து விமானங்கள் இரண்டு இன்று மாலை 5.40 மணி முதல் 6 மணி வரை 15 நிமிடங்கள் கோவை நகரை சுற்றி வட்ட மிட உள்ளன.
இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து செல்லும். அதே நேரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது கடற்படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளது.
Related Tags :
Next Story