சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள் - ரெயில்கள் எப்போது ஓடும்? என்று ஏக்கம்
சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பும் ஆசையுடன் வடமாநில தொழிலாளர்கள் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு படையெடுத்தபடி உள்ளனர்.
சென்னை,
ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலையும் உணவும் இன்றி தவித்து வருகிறார்கள். ஆங்காங்கே சிக்கித்தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தொழிலாளர்கள் சிறப்பு பஸ், ரெயில்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் தங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சென்னை சென்டிரலில் இருந்து ரெயில்கள் செல்கிறதா? என்று பார்ப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் நேற்று பல்வேறு இடங்களில் இருந்து வெயிலை பொருட்படுத்தாமல் கால்கடுக்க நடந்து வந்தனர்.
போலீசார் அவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, ‘ரெயில்கள் ஓடவில்லை. நீங்கள் திரும்பி செல்லுங்கள்’ என்றனர். ரெயில்கள் எப்போதும் ஓடும்? என்று கேட்டவர்களை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்று கேளுங்கள் என்று அனுப்பி வைத்தனர். அங்கு சென்றவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லுமாறு மாநகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி கையை நீட்டினர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் வீண் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகினர்.
Related Tags :
Next Story