மக்கள் அச்சப்பட தேவையில்லை, அலட்சியமாகவும் இருக்கக் கூடாது - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி


மக்கள் அச்சப்பட தேவையில்லை, அலட்சியமாகவும் இருக்கக் கூடாது - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி
x

கொரோனவால் மக்கள் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  30 பேர் பலியாகி உள்ளனர்.  சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தநிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் மிக அதிகம். 

கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயம்பேட்டுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. 

பரிசோதனையை அதிகரித்துள்ளதால் பாதிப்பு அதிகமாக தெரிய வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க கோயம்பேடு மொத்த காயகறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயம்பேடு சந்தையில் உள்ள காய்கறி கடைகளை திருமழிசைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story