முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
சென்னை,
மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் என்றால் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் தனது கையில் கென்டியை சுமந்து, மீனாட்சி பட்டணத்திற்கு செல்வார்.
இதே வேளையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாணத்தில் பங்கேற்பர். இதில் குன்றத்து பவளக்கனிவாய் பெருமாள், தனது தங்கை மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுப்பார். இத்தகைய நடைமுறை காலம் காலமாக நடைபெற்று வந்துள்ளது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவதற்கு முதல் நாளே திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு செல்வது மரபு. அந்த வகையில் நாளை, திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி இன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சகல பரிவாரங்களோடு பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்ல வேண்டும்.
ஆனால் ஊரடங்கு காரணமாக சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆகவே பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கையின் திருக்கல் யாணத்தில் தாரை வார்த்து கொடுக்காத நிலை வர லாற்றிலேயே முதல் முறையாக கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத் துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று இருந்தால் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று தாரை வார்த்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அம்மனின் திருக்கல்யாணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வேண்டுகோளுக் காகவும் உற்சவமூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில
மதுரையை ஆளும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம் காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெற்றது. வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. 4 சிவாச்சாரியர்கள் மட்டுமே இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம் நேரடியாக பார்க்க முடியாத பக்தர்களின் கவலையை போக்கும் வகையில் யு டுயூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீனாட்சிக்கும், பிரியாவிடை அம்மனுக்கும் மாலை மாற்றி திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை யுடுயூப்பில் பார்த்து பெண்கள் பக்தி பரவசத்துடன் தாலி மாற்றிக்கொண்டனர்.
ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில் பெண் பக்தர்கள் புது தாலி மாற்றிகொள்வார்கள். கோவிலில் மஞ்சள் சரடு கொடுப்பார்கள். இந்த ஆண்டு பெண் பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்து பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகமவிதிப்படி கோவில் வளாகத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் பக்தர்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் பல நூறு ஆண்டுகளாக இடைநில்லாமல் நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆகமவிதிப்படி நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூபம் நடைபெறும். அதன்பின்னர் கள்ளழகர் ஆண்டாள் சன்னதி முன்பாக எழுந்தருள்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு எதிர் சேவை, அலங்கார சேவை, 10 மணிக்கு தங்கக்குதிரை வாகன சேவையும், 12 மணிக்கு சைத்ரோ உபசார சேவையும் நடைபெறும்.
தொடர்ந்து அன்று பகல் 1.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கருட சேவையும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு, இரவு 8 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் இருப்பிடம் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
அழகர் மலையிலேயே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நேரலையில் ஒளிபரப்பாகிறது.
Related Tags :
Next Story