கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது - திருமழிசையில் காய்கறி அங்காடி ஏற்பாடு
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் மூடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக திருமழிசையில் காய்கறி அங்காடி செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. இதர கடைகள் அனைத்தும் அடைக் கப்பட்டு உள்ளன. மார்க்கெட் வளாகம் முழுவதும் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளியூர் சென்றவர்களில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் கடலூரில் 129 பேருக்கும், விழுப்புரத்தில் 76 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 7 பேருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் 63 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் மூடப்படுகிறது
இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோயம் பேடு மார்க்கெட் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
பொதுமக்களுக்கு காய்கறி தங்குதடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
திருமழிசையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறியை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story