கோவில்களின் உபரி வருமானத்தில் ரூ.10 கோடியை முதல்-அமைச்சர் நிதிக்கு வழங்கும் சுற்றறிக்கை வாபஸ் - ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி வருமானத்தில் இருந்து ரூ.10 கோடியை முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெறப்படும் என்று ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
சென்னை,
தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 47 திருக்கோவில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடியை, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்று இந்து சமயஅறநிலையத்துறையின் செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் 24-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளளார்.
தமிழகத் திருக்கோவில்களில் இந்து அறநிலையத்துறை ஊழியர்களைத் தவிர, அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், பூக்கள் வழங்குவோர், இசைக்கலைஞர்கள், சுத்திகரிப்பாளர்கள் உட்பட 10-க்கு மேற்பட்ட வகைப்பிரிவிலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணாத நிலையில், உபரி நிதியை முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்று கூறுவது, பணியாளர்களின் வாழ்வுரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
புண்ணிய காரணங்கள்
இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம், பிரிவுகள் 36 மற்றும் 66(1)களின்படி, ஏழ்மை நிலையில் உள்ள சமய நிறுவனங்கள், அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கவும், வேதங்களை ஓதுவதற்கும், படிப்பதற்கும் உள்ளிட்ட 12 புண்ணிய காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த புண்ணிய காரணங்களுக்கு உபரி நிதியை செலவு செய்தாலும், அதற்கு முன்பு சட்டப்பிரிவு 36-ன்படி அந்த விவரங்களை அனைவருக்கும் தெரியும் விதமாக வெளியிட வேண்டும். இந்த செலவுகளை மேற்கொள்ள எதிர்ப்பு கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறவேண்டும். அதன்பின்னர் அவற்றை பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் பின்பற்றாமல், கோவில்களின் உபரி நிதியை பொதுநிவாரணத்துக்கு வழங்கவேண்டும் என்ற அறநிலையத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சட்டவிரோதமானது ஆகும்.
ரத்து செய்யவேண்டும்
கோவில்களுக்குள் செலுத்தப்படும் நிதியானது, நம்பிக்கை அடிப்படையிலானது ஆகும். கோவிலுக்கு தேவையானதற்காக நிதியை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் தான் பக்தர்கள் காணிக்கையை வழங்குகின்றனர். அதனால், வேறு நோக்கத்துக்காக இந்த நிதியைப் பயன்படுத்துவது என்பது பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக அமைந்து விடும்.
தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் நிறுத்தப்பட்டு விட்டது. அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்களுக்கு கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த 47 திருக்கோவில்களின் உபரி நிதியை பயன்படுத்தலாம். எனவே, முதன்மை செயலாளரின் சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் கவுசிக் ஆஜராகி வாதாடினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் கார்த்திகேயன், ‘முதன்மை செயலாளர் சுற்றறிக்கையை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை திரும்ப பெறுவது குறித்து விரைவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைத்ததனர். மேலும், சுற்றறிக்கையை திரும்ப பெற்று விட்டு, அது தொடர்பான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story