கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சு


கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சு
x
தினத்தந்தி 5 May 2020 5:00 AM IST (Updated: 5 May 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை பற்றி கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், சிலரின் ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனாவின் கொடிய கரங்கள் பரவிக்கொண்டே இருக்கின்றன.

ஆரம்பத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சமீப நாட்களில் அதன் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த மார்ச் 7-ந் தேதியில் இருந்து இதுவரை தமிழகத்தில் 3,550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 2,392 பேர் ஆண்கள், 1,157 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். சென்னையில் மட்டும் 1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதுவரை மாநில அளவில் நாளொன்றுக்கு 100, 200 தொற்று என்றிருந்த எண்ணிக்கை, நேற்று ஒரே நாளில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 527 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் ஒரே நாளில் 266 பேருக்கு உறுதியானது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, முதல்-அமைச்சரின் செயலாளர் சாய்குமார் சென்றிருந்தனர். இந்த சந்திப்பு 50 நிமிடங்கள் நீடித்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு செய்துவரும் நிவாரண உதவிகள், வெளி மாநிலத்தவருக்கு அரசு செய்து தந்துள்ள வசதிகள், பொருளாதார மேம்பாட்டுக்காக செய்யப்பட்டுள்ள நிபந்தனை தளர்வுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

கவர்னர்னரும் சில ஆலோசனைகளை முதல்-அமைச்சருக்கு வழங்கினார். இந்த சந்திப்பின்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டீல் உடன் இருந்தார்.

Next Story