கோயம்பேட்டில் வியாபாரிகளை நடமாட விட்டது அரசுக்கு அழகா? திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி


கோயம்பேட்டில் வியாபாரிகளை நடமாட விட்டது அரசுக்கு அழகா?  திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 5 May 2020 12:57 PM IST (Updated: 5 May 2020 12:57 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் எல்லாம் சரியாகி விட்டது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனாவினால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை எங்கே போய் நிற்கும் என கணிக்க முடியாததாகி இருக்கிறது. தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் எண்ணிக்கை கூடுகிறது. எப்படி பரவுகிறது? எப்போதெல்லாம் பரிசோதனையே செய்யாமல் இப்போது செய்கிறார்களா? மாவட்ட வாரியாகச்செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை என்ன?

எண்ணிக்கையை அறிவிக்கும் போதெல்லாம், எவ்வளவு பேருக்கு  பரிசோதனை செய்தீர்கள்? என்று கேட்டேன். இப்போது பரிசோதனைகளை செய்யச்செய்ய அனைத்தும் வெளிச்சத்துக்கு வருகின்றன.

மார்ச் 24-ல் பேருந்து நிலையங்களிலும், ஏப்ரல் 25-ல் கோயம்பேடு காய்கறி அங்காடியிலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடியது திட்டமிடுதலில் இருந்த மெத்தனத்தினால் தானே?

மார்க்கெட்டில் தினமும் மக்களையும், வியாபாரிகளையும் தனி மனித விலகல் இல்லாமல் கூட விட்டது தான் அரசாங்கம் செயல்படும் அழகா? தங்கள் இடத்திலேயே தேவைகள் பூர்த்தியானால் மக்கள் எதற்காக வெளியே வரப்போகிறார்கள்? நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மக்களுக்கு அறிவியுங்கள் என்று நான் சொன்னது இதற்குத்தான்.

சென்னையில் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கிய போதே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்க வேண்டும். கட்டுக்கடங்காமல் போன பிறகு மே 1-ல் நியமிக்கிறார்கள். பேரிடர் காலங்களில் முதலிலேயே ஒருங்கிணைப்பு குழு அமைப்பார்கள். குழு அமைப்பார்கள். பல்வேறு தரப்பினர் இடம்பெறும் அப்படிப்பட்ட குழுவே நியமிக்கப்படவில்லை.

சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சிறப்பு கவனம் என்ன செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் 7-ம் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகளை திறக்க போவதாக அறிவித்துள்ளது அரசு. அப்படியானால் ஊரடங்குக்கு பொருள் என்ன?

ஆலோசனைகளை சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது. ஆனால் இதுபோன்ற சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை. ஊடங்கில் தளர்வுகள் செய்து, எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு நினைக்கிறது. மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், அறியாமையால், ஆணவத்தால் இழந்துவிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story