தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன - அரசிதழ் வெளியீடு


தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன - அரசிதழ் வெளியீடு
x
தினத்தந்தி 6 May 2020 4:00 AM IST (Updated: 6 May 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்யவேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2-ந்தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக எத்தனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன? என்ற அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மட்டும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மாவட்டங்கள் வாரியாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான விவரங்களையும், அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிகப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் நோய் தொற்று பரவுவதற்கான சங்கிலியை உடைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும்.

ஒரு கிராமத்தில் ஒருவருக்கு நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அந்த கிராமத்தை கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரவேண்டும். அந்த நோய்தொற்று கிராம பஞ்சாயத்துக்கு பரவும் பட்சத்தில், அந்த கிராம பஞ்சாயத்தை கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரவேண்டும். ஒருவேளை ஒரு கிராம பஞ்சாயத்தின் எல்லையில் நோய் தொற்று ஏற்படும்பட்சத்தில், அருகாமையில் உள்ள கிராம பஞ்சாயத்தையும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரவேண்டும். மாநகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் வசிக்கும் தெருவை கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரவேண்டும். அவர் தெருவின் எல்லையில் இருக்கும்பட்சத்தில், அருகாமையில் உள்ள தெருவையும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரவேண்டும்.

5 அல்லது அதற்கு மேற்பட்ட நோய் தொற்று ஒரே பகுதியில் ஏற்பட்டால் கொத்து, கொத்தான நோய் தாக்கமாக கருதப்படும்.

நோய் தொற்று கொத்து, கொத்தாக கிராமத்திலோ அல்லது ஒட்டியுள்ள கிராமங்களிலோ ஏற்பட்டாலோ கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரவேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கொத்து, கொத்தாக பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த வார்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் கொண்டுவரப்படும். இது வார்டின் எல்லைப்பகுதியில் நடந்தால், அருகாமையில் உள்ள வார்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் சேர்க்கப்படும்.

டவுன் பஞ்சாயத்தில் கொத்து, கொத்தாக நோய் தொற்று ஏற்பட்டால் அந்த டவுன் பஞ்சாயத்தே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் சேர்க்கப்படும். கிராமப்புற பகுதிகளில் 500 மீட்டர் தூரமும், நகர்ப்புற பகுதியில் நோய் தொற்று பரவுவதற்கு ஏற்ப இடைப்பட்ட பகுதியாக வரையறுக்கப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் ஒலி பெருக்கியில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பாடுகள் 28 நாட்கள் கண்காணிக்கப்படும். மருத்துவ அதிகாரி மற்றும் சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழு இதை செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story