தமிழகத்தில் மது கடைகள் திறக்க எதிர்ப்பு; கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு
தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதேபோன்று, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்தது.
தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பணிகள் நடந்து வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். அதில், தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும். 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
மது கடைகள் திறப்பது சமூக தொற்று பரவும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும். மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணிவீர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story