தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை- சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான வாதத்தின் போது, "டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும். கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது.மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும்” என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பு மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று கூறியது. மேலும், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
Related Tags :
Next Story