டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு


டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பு: எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2020 4:30 AM IST (Updated: 7 May 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று(வியாழக்கிழமை) முதல் திறக்கப்படுவதையொட்டி, எந்தெந்த நேரத்தில் எந்த வயதினர் மது வாங்கலாம்? என்பது பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திறக்கப்படும் ஒவ்வொரு டாஸ்மாக் மதுக்கடைக்கும் 2 காவலர், 2 ஊர்க்காவல் படை அல்லது தன்னார்வலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். முடிந்தால் மது வழங்குவதற்கு கூடுதலாக ஒரு கவுண்ட்டரை திறக்க வேண்டும்.

வரிசையை ஒழுங்குபடுத்த தடுப்புகள் வைக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் மது வாங்கவரும் வாடிக்கையாளர்களில் 50 வயதுக்கு அதிகமானோருக்கு காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை மது வழங்கலாம்.

40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து 3 மணிவரை மது வழங்கலாம். 40 வயதுக்கும் கீழானவர்களுக்கு பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மது விற்பனை செய்யலாம்.

அதிரடிப்படை பாதுகாப்பு

உள்ளூர் போலீஸ் மற்றும் மதுவிலக்கு போலீசார் அங்குள்ள கலால், டாஸ்மாக், வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

திருமண மண்டபங்கள், பொது இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும். ஒவ்வொரு நகர்ப்புறங்களிலும் பறக்கும்படை அல்லது அதிரடிப்படை போலீசாரின் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story