ஊரடங்கால் பக்தர்கள் அனுமதி ரத்து: இணையதளம் மூலம் கோவில் வழிபாடுகள் நேரடி ஒளிபரப்பு - அறநிலையத்துறை நடவடிக்கை


ஊரடங்கால் பக்தர்கள் அனுமதி ரத்து: இணையதளம் மூலம் கோவில் வழிபாடுகள் நேரடி ஒளிபரப்பு - அறநிலையத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2020 3:45 AM IST (Updated: 7 May 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தொடருவதால் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் தினசரி நடக்கும் வழிபாடுகள் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பூஜைகளை பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே பார்ப்பதற்காக அந்தந்த கோவில்கள் சார்பில் இணையதள முகவரி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் பிரதோசம் போன்று பெரும்பாலான கோவில்களில் இணையதளம் மூலம் விழாக்கள் மற்றும் பூஜை வழிபாடுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதேபோன்று தனியார் கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளும் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சித்ரா பவுர்ணமி

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கிரிவலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கிரிவலம் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து விட்டதால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வசந்த உற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவைமுன்னிட்டு சாமி, அம்பாள் உற்சவருக்கு அபிசேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லாததால், சிறப்பு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக பக்தர்கள் நலன் கருதி www.aru-n-a-c-h-a-l-esw-a-r-a-rt-e-m-p-le.tnh-r-ca.in என்ற, கோவில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக இணை கமிஷனர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.

நரசிம்மர் ஜெயந்தி

பெருமாள் கோவில்களில் அருள்பாலித்து வரும் நரசிம்மருக்கான ஜெயந்தி விழா நேற்று நடந்தது. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், அசோக்நகர் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தது. ஆனால் பக்தர்கள் எவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கோவில் நடைகள் சாத்தப்பட்டாலும் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. இதனை பக்தர்கள் பார்ப்பதற்காக ஒரு சில கோவில்களில் மட்டும் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கோவில்களுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஒரு சில கோவில்களில் பராமரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் வழக்கம் போல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story