மது வாங்க ஆதார் அட்டை அவசியம் என்ற நிபந்தனையை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் அரசு முறையீடு
மது வாங்க ஆதார் அட்டை அவசியம் என்ற நிபந்தனையை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு முறையீடு செய்துள்ளது.
சென்னை,
மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையை தவிர தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு கூறிய சென்னை ஐகோர்ட்டு, ‘டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறப்பதற்கு தடை இல்லை என்றும், அதேநேரம் மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. ஒரு நபருக்கு 2 பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்யவேண்டும். அப்போது, அவரது ஆதார் எண்ணை குறிப்பிட்டு ரசீது வழங்கவேண்டும்’ என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிலையில், இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிகள் வினீத்கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் பல வழக்குகளை விசாரித்தனர். அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மது விற்பனை செய்யும்போது, ஆதார் எண்ணை அவசியம் ரசீதில் குறிப்பிட வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும், அதில் சில நடைமுறை சிக்கல் உள்ளது’ என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் வரும் 14-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்று இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்று கூறினர்.
Related Tags :
Next Story