ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு


ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2020 5:30 AM IST (Updated: 8 May 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னை, 

போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அனைத்து மாநில போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்க வேண்டும். அதில் மாற்றம் தேவைப்பட்டால் அதன் பின்னர் பரிசீலிக்கலாம். சாதாரண நாட்களில் பஸ் இயக்கப்பட்ட முந்தைய தகவல்களை வைத்து மிக அதிக தேவையுள்ள இடங்களுக்கு முடிந்தால் அதிக பஸ்களை இயக்கலாம்.

ஏ.சி. வசதி கிடையாது

பஸ்சில் பயணிகள் ஏற்றும் அளவில் 50 சதவீதம் பேரை மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றும் அளவில் இருக்கைகள் மற்றும் நிற்கும் இடங்களில் குறியீடுகளை வரைய வேண்டும்.

ஒவ்வொரு பயணம் முடிந்த பிறகும் பஸ்சை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கிருமி அதிக நேரம் வாழ முடியாத வகையில் ஏ.சி. உபயோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

முக கவசம் கட்டாயம்

காற்றில் சிறிது நேரம் மட்டுமே கொரோனா வாழும் என்பதால், பஸ்சுக்குள் இருக்கும் காற்று உடனடியாக வெளியேறி புதுக்காற்று வந்துகொண்டிருக்கும் வகையில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.

முக கவசம் அணியாத பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி கிடையாது. ஏறி, இறங்கும் வாசல்களை சரியாக பயன்படுத்தி, குறிக்கப்பட்ட இடத்தில் அமரவோ, நிற்கவோ வேண்டும். பஸ் நிறுத்தங்களிலும், பஸ்களில் நிற்கும்போதும், அதிலிருந்து இறங்கும்போதும் மற்ற பயணிகளிடம் இருந்து 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

தனிமையில் ஓட்டுனர்

பஸ்களை இயக்குவதற்கு முன்பு டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட அதன் ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவர்கள் முக கவசம், கையுறை அணிய வேண்டும். ஓட்டுனர்களின் இருக்கும் இடம் திரையிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

கண்டக்டர் சானிடைசரை பயன்படுத்தி டிக்கெட் வழங்க வேண்டும். பஸ்சுக்குள் இருக்கும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியையும் நடத்துனர் சேர்த்து கவனிக்க வேண்டும்.

சில்லரையை தவிருங்கள்

பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதத்தில் டெப்போக்கள், முனையங்களில் பஸ்களை 5 மீட்டர் இடைவெளியில் நிறுத்தி வைக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை வைத்து பயணிகள் நெருக்கடியை ஒழுங்குபடுத்த வேண்டும்.

டிக்கெட்டுக்காக சில்லரைகளை மாற்றும் பழக்கத்தை பயணிகள், கண்டக்டர்கள் தவிர்க்கலாம். தினசரி, மாத பாஸ்களை வாங்கி பயன்படுத்தலாம். பஸ்களில் ஏற வரிசையில் நிற்கலாம். பே டிஎம்., கூகுள் பே, ஜியோ பே மற்றும் கியூஆர் கோட் இருக்கும் கட்டணம் செலுத்தும் வசதிகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story