சென்னையில் 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிப்பு
சென்னையில் 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னையில் இன்று 3 பேர் பலியான நிலையில், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் மிக அதிக அளவாக சென்னையில் பாதிப்பு உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஊரடங்கிற்குள் போடப்பட்ட 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு, கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதற்கான காரணமாக குற்றம் சாட்டப்படுகிறது. முழு ஊரடங்கால் அச்சமடைந்த மக்கள், கடந்த ஏப்ரல் 25ந்தேதி காய்கறி மற்றும் மளிகை கடைகளில் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சில மளிகை கடை உரிமையாளர்களுக்கும் காய்கறி கடை உரிமையாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது.
சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, போதிய மருத்துவ உபகரணங்கள் முன்கூட்டியே வழங்காதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அளவு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் முழு உடல் கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும் அடுத்தடுத்து தொற்று பரவியதாகவும் மாநகராட்சி பணியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உதவி புரிந்த தன்னார்வலர்களுக்கு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்யாததும், பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்ட பின், தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களில் வருகின்றன. இவற்றில் ஒன்றான சென்னையில் 40 பகுதிகள் கடந்த 28 நாட்களாக பாதிப்பு இல்லாத நிலையை அடைந்தன. இதனை அடுத்து அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டன. இதனால் சென்னையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Related Tags :
Next Story