ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் - தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை


ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் - தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை
x
தினத்தந்தி 9 May 2020 4:15 AM IST (Updated: 9 May 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்போது 50 சதவீத மாணவர்களை கொண்டு ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

சென்னை, 

நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்ததும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் என்ன மாதிரியான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்? மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கேட்டு இருந்தது.

அதன்படி, இந்த கவுன்சில் சில முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையிலான டிஜிட்டல் தொடர்பில் பிளவு ஏற்பட்டு இருப்பது கவலை அளிப்பதாகவும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான தேவைகள் அதிகரித்து இருப்பதாகவும் இந்த ஆலோசனையில் பேசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம்; அப்படி பள்ளிகள் திறக்கப்படும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; 50 சதவீத மாணவர்களுடன் ஒருநாள்விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம்; பள்ளிக்கு வராத 50 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன், டி.வி.சேனல் மூலம் வகுப்புகள் நடத்தலாம்; என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்புக்கும், ஒரு டி.வி. சேனல் என்ற முறையில் அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.

அதேபோல், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கற்றல், கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்தும் சில தெளிவுகளை முன்னெடுத்துள்ளனர்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அங்கீகரிக்குமா? என்பது நாளை மறுதினம்(திங்கட்கிழமை) நடக்கும் கூட்டத்திற்கு பின் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Next Story