கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிர்ப்பலி, 1895 ஆக உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா ஒருசில மாநிலங்களில் கட்டுக்குள் வந்தாலும், வேறு சில மாநிலங் களில், வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை, பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு உயிரிழப்பு, 694 ஆக உயர்ந்தது. குஜராத்தில் கொரோனாபாதிப்பு 7 ஆயிரத்தை கடக்க, டெல்லியில் 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது
தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒரே நாளில் 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக ஆய்வகங்கள் இருப்பதாகவும் பரிசோதனைகளும் அதிகமாக செய்யப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது
வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால், சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை தொடங்கப்பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. மாதிரிகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தற்போதைய நிலையில், 36 அரசுமருத்துவமனைகள், 16 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 2.10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனை செய்வதற்கான 52 ஆய்வகங்கள் உள்ளன. அதேபோல், தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகள் அதிகமானதால், பாதிப்பும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story