அவசரமாக வெளியூர் செல்வோருக்கு 24 மணி நேரமும் பாஸ் வழங்கினால் என்ன? - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
அவசரமாக வெளியூர் செல்வோருக்கு 24 மணி நேரமும் பாஸ் வழங்கினால் என்ன என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசிடம் விண்ணப்பித்து ‘பாஸ்’ வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பாஸ் அலுவலக நேரத்தில் மட்டுமே வழங்கப்படுவதால், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், நெருங்கிய உறவினர்களின் இறப்பு, உடல்நலம் பாதிப்பு, திருமணம் உள்ளிட்டவைகளுக்காக அவசரமாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசிடம் ‘பாஸ்’ வாங்க வேண்டியதுள்ளது. இந்த பாசை அலுவல் நேரத்தில் மட்டும் தான் அதிகாரிகள் வழங்குகின்றனர். எனவே, 24 மணி நேரமும் பாஸ் வழங்கும் விதமாக அலுவலர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் ‘வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கு எந்த அடிப்படையில் பாஸ் வழங்கப்படுகிறது? முதலில் வந்தவருக்கு முதல் வாய்ப்பு என்பதுபோல பாஸ் வழங்கப்படுகிறதா? 24 மணி நேரமும் பாஸ் வழங்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் என்ன?’ என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பினர்.
பின்னர், இதுகுறித்து வருகிற 12-ந் தேதிக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story