அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்க அரசு அறிவிப்பு வெளியிடுங்கள் - வைகோ வேண்டுகோள்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்க அரசு அறிவிப்பு வெளியிடுங்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள் தவிர, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிய, சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை.
இவர்கள்தான் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை ஆக்கி தருகின்றார்கள். அவர்கள் இயங்க முடியவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு கொடுத்து இருக்கிற உதிரிபாகங்கள் கொள்முதலை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றார்கள். மற்றவர்களும், மாற்றிவிடக்கூடும். அதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். குடியிருப்புகளும் கிடையாது. எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு தமிழக அரசு அறிக்கை வெளியிடவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story