எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை


எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2020 9:30 PM GMT (Updated: 9 May 2020 8:33 PM GMT)

தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சில்லரை விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

இதுகுறித்து முதல்-அமைச்சருக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) மூலம் வசந்த் அன்கோ, சத்யா, கிரியாஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், விவேக்ஸ், ஸ்ரீமீனாட்சி மின்விசிறி ஹவுஸ், பி.இ.ஏ., டார்லிங், ஷாஸ், ஷார்ப்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான விற்பனை சந்தையில் ஆண்டுக்கு ரூ.7,500 கோடி அளவுக்கு பணம் புழங்குகிறது. இந்த சந்தையில் 25 ஆயிரம் விற்பனை பிரதிநிதிகள் முன்னிலையில் உள்ளனர்.

இதன் மூலம் ஆண்டுக்கு ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,875 கோடி கிடைக்கிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜி.எஸ்.டி. வருவாயில் 40 சதவீதத்தை இந்த சந்தை அளிக்கிறது. மிகக் குறைந்த வருமானத்தில்தான் இந்த தொழில்கள் இயங்கி வருகின்றன.

கொரோனா தொடர்பான ஊரடங்கு தொடங்கி 45 நாட்கள் எங்களின் கடைகள் இயங்கவில்லை. எங்களிடம் இருக்கும் பொருட்கள் எப்போதுமே மக்களுக்கு தேவையாக உள்ளன. கடை வாடகை, ஊழியர்களுக்கு சம்பளம், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் என ரூ.300 கோடி அளவுக்கு சவால் எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும். கொரோனா தொடர்பான விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் இயங்குவோம். மேலும் காலதாமதம் செய்தால் 40 சதவீதம் பேர் வேலை இழப்பார்கள். 10 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

லட்சக்கணக்கான குடும்பத்தினர், உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ், பொறியியல் சேவை, விளம்பர சேவை ஆகிய தொழில்களை நம்பியுள்ளனர். இவர்களும் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் குறையும்.

எனவே இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story