மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவு தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய எரிசக்தி துறை கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்களின் விரிவான கருத்துகளை அரசு கேட்க வேண்டும்.
எரிசக்தி பிரிவில் மாநில அரசின் சுதந்திரமான செயல்பாட்டில் நேரடியாக தலையிடுவதாக இந்த சட்ட திருத்தம் அமைந்திருப்பது கவலையளிக்கிறது. இது சம்பந்தமாக 2018-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி கடிதம் எழுதியிருந்தேன். அதில், மின்சார திருத்த சட்ட மசோதா, மாநில அரசின் சில அதிகாரங்களை பறிப்பது பற்றியும், தற்போதுள்ள மின்சார சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய மசோதா, கடைசி நுகர்வோர் வரை மின்சாரத்தை தனியார் மற்றும் தனியாரின் உரிமை பெறுவோர் மூலம் வினியோகம் செய்வதற்கு வழிவகை செய்வதோடு, ஒட்டுமொத்த வினியோக கட்டமைப்பையுமே தனியார் வசம் ஒப்படைக்க வழியை திறந்துள் ளது. இது மக்கள் நலனுக்கு எதிரானதாகும்.
மாநிலத்தின் ஒதுக்கீட்டை இந்த புதிய மசோதா நிராகரிக்கிறது. மேலும், நுகர்வோருக்கு, குறிப்பாக விவசாயிகள் மற்றும் வீட்டு மின்சார உபயோகிப்பாளர்களுக்கு நேரடி மானிய பயன் மாற்றம் என்ற டி.பி.டி. முறையையும் இந்த மசோதா கொண்டுள்ளது.
மின்சார பிரிவில் டி.பி.டி. முறையை அமல்படுத்துவது மிகவும் சிக்கலானது என்பதை நான் ஏற்கனவே கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறேன். அது விவசாயிகள் மற்றும் வீட்டு மின்சார உபயோகிப்பாளர்களின் நலனுக்கு பாதகமாக அமையும்.
விவசாயிகள் அனைவரும் இலவசமாக மின்சாரம் பெற வேண்டும் என்பது எனது அரசின் நிலையான கொள்கையாகும். இதுபோன்ற மானியம் பெறுவோருக்கு மானியத்தை செலுத்தும் நடைமுறையை மாநில அரசே முடிவு செய்ய விட வேண்டும்.
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதிலும் மாநில அரசின் அதிகாரங்கள் எடுக்கப்படுகின்றன என்பது, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த மசோதாவில் அரசுக்கு இணையான அதிகாரம் கொண்ட மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையத்தை மத்திய அளவில் உருவாக்கும் ஷரத்து உள்ளது. மின் கொள்முதல், விற்பனையாளர், உற்பத்தியாளர் மற்றும் உரிமையாளர்கள் இடையே ஏற்படும் ஒப்பந்த சிக்கல்களுக்கு மாநில ஒழுங்குமுறை ஆணையம் தீர்வு கண்டு வருகிறது. ஆனால் அதை அமலாக்க ஆணையத்துக்கு மாற்ற இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதால் அந்த ஷரத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஏற்கனவே கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வரும் சூழ்நிலையில், இந்த மசோதா தொடர்பான விரிவான விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். எனவே மின்சார சட்டத்தில் அவசரமாக திருத்தங்களை மேற்கொள்வது மாநில அரசுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
சட்ட திருத்த வரைவு மசோதாவில் இருக்கும் ஷரத்துகள், ஏற்கனவே சிக்கலான இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே மின்சார சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர, இது உகந்த நேரம் இல்லை. எனவே கொரோனா பிரச்சினைகள் முடிவுக்கு வந்த பிறகு மாநில அரசுகளுடன் விரிவாக விவாதித்து முடிவெடுக்கும் வகையில், அந்த திருத்தங்கள் செய்வதை கைவிட எரிசக்தித் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story