பள்ளி பாட புத்தகங்களில் கொரோனா குறித்த பாடம் இடம் பெற செய்யலாமா? - கல்வித்துறை ஆலோசனை
பிளஸ்-2 தவிர பிற வகுப்புகளுக்கு கொரோனா குறித்த பாடத்தை புத்தங்களில் இடம்பெற செய்யலாமா? என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
சென்னை,
கொரோனா என்ற ஒரு வார்த்தை அனைத்து உலக நாடுகளையும் நடுநடுங்க வைத்துவிட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா குறித்த பல்வேறு தகவல்கள், நாட்டு மக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் தெளிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இதுதொடர்பாக மாணவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக, சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிளஸ்-2 வகுப்பு மைக்ரோ பயாலஜி பாட புத்தகத்தில் கொரோனா தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் பிற வகுப்புகளுக்கான பாட புத்தகங்களிலும் கொரோனா தொடர்பான பாடத்தை இடம்பெற செய்யலாமா? என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசிக்கிறது.
ஆனால் நடப்பாண்டுக்கான பாட புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், இனி பாட புத்தகங்களில் கொரோனா தொடர்பான பகுதியை இடம்பெற செய்வது கடினம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துவிட்டது.
இருந்தாலும், அதுதொடர்பான பாடத்தை ஒரு பகுதியாக பதிவு செய்து புத்தகத்தில் இணைக்கலாமா? அல்லது அடுத்த ஆண்டில் இருந்து பாட புத்தகங்களில் இணைக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
Related Tags :
Next Story