திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 43 பேருக்கு கொரோனா உறுதி


திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 43 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 11 May 2020 10:36 AM IST (Updated: 11 May 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்,

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,959 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  47 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோன்று சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலருக்கு தொற்று பரவியுள்ளது.  கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனைகளில் இது உறுதியானது.

அந்த வகையில், திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 120 பேருக்கு கடந்த 9ந்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்தது.

இதனை தொடர்ந்து திருவள்ளூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 44ல் இருந்து 110ஆக அதிகரித்தது.  இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதில் பெருமளவில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  திருவள்ளூரில் 32 பேர், மீஞ்சூரில் 6 பேர், பூந்தமல்லியில் 4 பேர் உள்பட 43 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இவர்களில் 6 வயது சிறுவனும் அடக்கம்.  அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story