விழுப்புரம் அருகே பயங்கரம்: பெட்ரோல் ஊற்றி மாணவி எரித்துக்கொலை - அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது
விழுப்புரம் அருகே பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (வயது 15). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்றிருந்தனர். வீட்டில் ஜெயஸ்ரீ மட்டும் தனியாக இருந்தார்.
அந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் கணவரும், அ.தி.மு.க. பிரமுகருமான முருகன்(57), அவரது உறவினரான அ.தி.மு.க. கிளை செயலாளர் யாசகன் என்கிற கலியபெருமாள் (52) ஆகியோர் ஜெயபால் வீட்டிற்கு திடீரென சென்று, அங்கிருந்த மாணவி ஜெயஸ்ரீயை கயிற்றால் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதில் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயபாலின் தம்பி குமார், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முருகனின் தங்கையான சவுந்தரவள்ளியின் கையை பிடித்து இழுத்துள்ளார். அதிலிருந்து 2 குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி சிறு, சிறு தகராறு ஏற்பட்டு வந்ததும், அதன் காரணமாகவே மாணவி ஜெயஸ்ரீயை முருகனும், சவுந்தரவள்ளியின் கணவரான கலியபெருமாளும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக முருகன், கலியபெருமாள் ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஜெயஸ்ரீ நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால், அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story