ஊரடங்கினால் விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதால் விவசாய விளை பொருட்கள் நேரடியாக கொள்முதல் - ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்


ஊரடங்கினால் விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதால் விவசாய விளை பொருட்கள் நேரடியாக கொள்முதல் - ஐகோர்ட்டில், தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 13 May 2020 2:00 AM IST (Updated: 13 May 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கினால் விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதால் விவசாய விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால், அந்த விளை பொருட்களை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விவசாய பண்ணைகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அவை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரில் சென்று வினியோகம் செய்யப்பட்டன.

இணைப்பு பாலம்

தமிழகம் முழுவதும் 138 குளிர்சாதன கிடங்குகளில் விளை பொருட்களை வைத்து கொள்ள விவசாயிகளுக்கு கட்டணமில்லா சேவை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் வருகிற 31-ந்தேதி வரை தொடரும். தமிழகத்தில் சுமார் 6.92 லட்சம் விவசாயிகள் ‘உழவன் ஆப்’ வசதியை பயன்படுத்துகின்றனர். இந்த ‘ஆப்’ விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடம் இருந்து 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.522 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலன் காக்கும் வகையில் செயல்பட்ட கால்சென்டர் மூலமாக 11 ஆயிரத்து 550 அழைப்புகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story