தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து கிடையாது - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்பு


தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து கிடையாது - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்பு
x
தினத்தந்தி 13 May 2020 4:00 AM IST (Updated: 13 May 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய ரெயில்வே துறை, டெல்லி-சென்னை மற்றும் சென்னை-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 13-ந்தேதியில் (இன்று) இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. 11-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மே 31-ந்தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் ரெயில் சேவைகளை தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (மே 14 மற்றும் 16-ந்தேதி) ரெயில் சேவைகள் இயக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு ரெயில்கள் தவிர, இதர வழக்கமான ரெயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி ரெயிலில் சுமார் 1,100 பயணிகள் வரை பயணம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தி பரிசோதனை

குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயில்கள் மூலம் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரெயில் பயணிகளையும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து தான் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்த ரெயில்கள் மூலம் வரும் பயணிகளை ரெயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும், அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனையிலும், தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை மந்திரி மற்றும் ரெயில்வே மந்திரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story