மாணவர்களின் சிரமத்தை போக்கும் விதத்தில் அரசு கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்பு ரத்து - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு


மாணவர்களின் சிரமத்தை போக்கும் விதத்தில் அரசு கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்பு ரத்து - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2020 1:15 AM IST (Updated: 14 May 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அரசு கல்லூரிகளில் நடைமுறையில் இருந்த இரு சுழற்சி முறை வகுப்பு முறை ரத்து செய்யப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் சி.ஜோதி வெங்கடேசுவரன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்கள் படிக்கும் பொருட்டு கல்லூரிகள் அமைந்துள்ள அந்தந்த பகுதி மாணவர்களின் வசதிக்கேற்ப சுழற்சி முறையில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சுழற்சி-1 வகுப்புகளும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுழற்சி-2 வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன.

இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வெகுசீக்கிரத்தில் வகுப்புகள் தொடங்குவதாலும், நேரம் தாழ்ந்து வகுப்புகள் முடிவதாலும் சிலர் உணவு உட்கொள்ள இயலாத சூழலில் சோர்வுடன் வகுப்பில் அமரும்நிலை ஏற்படுகிறது. சில மாணவிகள் ரத்தசோகை போன்ற நோய்களுக்கு ஆட்படும் நிலையும் நிலவுகிறது.

மாணவர்களின் சிரமத்தை போக்கும்விதத்திலும் முழுமையான கல்விச்சூழலை கல்லூரிகளில் ஏற்படுத்தும் வகையிலும் சுழற்சி-1, சுழற்சி-2 வகுப்புகள் நடைபெறுவதை ரத்து செய்து, 2006-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தவாறு அரசு கல்லூரிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த கருதப்படுகிறது.

ஒரே வகுப்புகளாக நடத்த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சில உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. அதற்காக வகுப்பறை கட்டிடங்கள், இருக்கைகள், மேஜை, நாற்காலிகள் வாங்க ரூ.150 கோடியே 9 லட்சத்து 5 ஆயிரத்து 500 நிர்வாக ஒப்பளிப்பும், நிதி ஒதுக்கீடும் செய்து ஆணையிட அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story