கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்


கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 14 May 2020 4:30 AM IST (Updated: 14 May 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை, 

தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தின் முடிவில் அவர் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் மட்டும் 26 லட்சம் பேர் குடிசை பகுதியிலே வசிக்கின்றனர். நெருக்கமான பகுதி, குறுகலான தெருவில் அதிக மக்கள் வசிப்பதால் எளிதில் நோய் தொற்று ஏற்படுகிறது. 3,941 கடைகள் இருக்கும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே பெரியது. அங்கு வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

அங்கு தொற்று ஏற்படும் என்று கடந்த மார்ச் 19-ந் தேதியன்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிகமான பேர் குழுமியிருப்பதால் தொற்று ஏற்பட்டுவிடும், எனவே அரசு உங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும், நீங்கள் தற்காலிக மார்க்கெட் அமைக்கக்கூடிய பகுதியிலே சென்று காய்கறி விற்பனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. கோயம்பேடு பகுதியிலே யாரும் முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை.

பலமுறை கோயம்பேடு சந்தை நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு கடும் முயற்சி எடுத்தது. ஆனால் வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் வேறு இடத்தில் வியாபாரம் நஷ்டமாகிவிடும் என்ற எண்ணத்திலே இருந்துவிட்டதால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

கோயம்பேட்டில் இருந்து அதிகமான பேர் வெளிமாவட்டத்திற்கு சென்றதால், அந்த மாவட்டங்களிலே நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. சென்னையிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணம் இதுதான்.

கோயம்பேட்டில் நோய்பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தவறான செய்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். அது உண்மைக்கு புறம்பானது. பல்வேறு முயற்சிகள் அரசால் எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் கலெக்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அந்தந்த கலெக்டர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகள் இருக்கிற தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம். விதிமீறல்கள் மீறப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த கடைகள் திறக்கப்பட்டு விடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story